expr:class='"loading" + data:blog.mobileClass'>

Saturday 7 January 2017

படித்தால் கண் கலங்குவீர்கள்




ஆள் நடமாட்டம் இல்லாத அந்த சாலையில் ,
அந்தப் பெண் நடந்து சென்று கொண்டிருந்தார்  .

அருகிலேயே அவளது கணவர் ...
  தூக்க முடியாமல்  ஒரு பெரிய மூட்டையை  தோளில் தூக்கி சுமந்தபடி ,  அந்தப் பெண்ணுக்கு துணையாக வந்து கொண்டிருந்தார் ..!
.
இவர்கள் இருவரைத்  தவிர அந்த சாலையில் ஒரு ஈ காக்கா கூட இல்லை .

காரணம் ... ஊரடங்கு உத்தரவு ..!
.
கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு விட்டன .
போக்குவரத்து அடியோடு  நிறுத்தப்பட்டு விட்டது.
வீட்டிலிருந்து யாராவது தெருவுக்கு வந்தால் ,
விரட்டி அடித்தார்கள் போலீஸ்காரர்கள் !

காஷ்மீர் தலைநகரமான ஸ்ரீநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது இது ! ( 2016 ஜூன் )

பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ,  ஒரு முக்கியமான தலைவர் கொல்லப்பட்டிருந்தார் . அதை தொடர்ந்து கலவரம் வெடித்தது .

இந்துக்களும் முஸ்லிம்களும் மோதிக் கொண்டார்கள் .
உடனே போடப்பட்டது ஊரடங்கு உத்தரவு ..!
.
சந்தேகப்படும்படி யாராவது கண்ணில் பட்டால் உடனே சுட்டுத்  தள்ள உத்தரவு !
ஆனாலும் அந்த கணவனும் மனைவியும் அந்த ஆள் அரவமற்ற சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள் .
.
தடுத்தி நிறுத்தினார்கள் போலீஸ்காரர்கள்: .“எங்கே போகிறீர்கள் ?”

அந்தப் பெண் பதில் சொன்னார் : “ஜவகர் நகருக்கு..?”

“ஜவகர் நகருக்கா ? உங்கள் வீடு அங்கேயா இருக்கிறது ?”

“இல்லை ..இங்கே ஸ்ரீநகரில்தான் இருக்கிறோம்.. ஒரு முக்கியமான வேலையாக ஜவகர் நகருக்கு போகிறோம்”

“முக்கியமான வேலையா ? இந்த நெருக்கடியான நேரத்திலா ? அதுவும் நீங்கள் போகும் ஜவகர் நகர் கலவர பூமி .. இந்த நேரத்தில் அங்கு போக உங்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது ? அது இருக்கட்டும் ... இங்கிருந்து ஜவகர் நகர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது தெரியுமா?”

அந்த கணவன் சொன்னார் : “தெரியும்..பல கிலோ மீட்டர்கள் போக வேண்டும்..”

“பஸ் ஆட்டோ எதுவும் ஓடவில்லை . எப்படி நடந்து போவீர்கள் அவ்வளவு தூரம் ? அதுவும் இவ்வளவு பெரிய மூட்டையை தூக்கிக் கொண்டு ..”

“போய் விடுவோம்..” –கணவனும் மனைவியும் சேர்ந்தே சொன்னார்கள் .
.
இவர்கள் பிடிவாதத்தை கண்டு கோபம் கொண்டார்  அந்த போலீஸ்காரர் :“ சந்தேகப்படும்படி யாராவது சாலையில் போனால்  கண்டவுடன் சுடச் சொல்லி எங்களுக்கு உத்தரவு .. தெரியுமா ?”

“ தெரியும் ..”

“அது மட்டும் அல்ல ..இந்துக்களும் முஸ்லிம்களும் அங்கங்கே மோதிக் கொண்டிருக்கிறார்கள் . அந்த கலவரக்காரர்கள் கண்ணில் பட்டால் உங்கள் கதையையே முடித்து விடுவார்கள் .”

அந்தப் பெண் உறுதியாக சொன்னார் : “அதுவும் தெரியும் .. ஆனாலும் நாங்கள் போய் விடுவோம் .. போய்த்தான் ஆக வேண்டும்..மிக மிக முக்கியமான வேலை ..”
.
அந்தப் பெண் நடக்க ஆரம்பித்தார் . கணவனும் மூட்டையை தூக்கி தோளில் வைத்துக் கொண்டு மனைவியை பின்  தொடர்ந்தார் .
.
இடையில் பல இடங்களில் போலீஸ் அவர்களை மறித்தது . மீண்டும் மீண்டும் எச்சரித்தது .
.
அதையும் மீறி  அந்த கணவனும் மனைவியும் வெறிச்சோடிய அந்த  சாலைகளில்  ....
பகல் முழுவதும் நடந்தார்கள் ; பல கிலோ மீட்டர் தூரத்தை கடந்தார்கள் . ஒரு வழியாக ஜவஹர் நகரை அடைந்தார்கள் .
.
எல்லா வீடுகளின் கதவுகளும் இறுக்கமாக மூடப்பட்டிருந்தன .
இந்த தம்பதிகள்   தேடி வந்தது பண்டிட்ஜி வீடு . அது அடுத்த தெருவில்தான் இருக்கிறது .
தெருவை   நெருங்கினார்கள் .
.
அதற்கு முன் ...ஒரு கடுமையான குரல் அவர்களை அதட்டியது : “நில்லுங்கள்”

திரும்பிப் பார்த்தார்கள் .
காவல்துறை அதிகாரியுடன் சேர்ந்து ஒரு பெரிய போலீஸ் பட்டாளமே அங்கு நின்றது .

“உங்களை கைது செய்யப் போகிறோம் .”
“எதற்காக ..?”
“உங்கள் தோளில் இருக்கும்  பெரிய மூட்டைக்குள் என்ன ஆயுதங்களை  வைத்திருக்கிறீர்கள் ? அதை கீழே இறக்குங்கள் .”
.
இறக்கினார்கள் .
போலீஸ்காரர்கள் அதை எச்சரிக்கையுடன் திறந்து பார்த்தார்கள் . திகைத்துப்  போனார்கள் ..!

“எல்லாமே உணவுப் பொருட்கள் .. யாருக்கு இதை கொண்டு போகிறீர்கள்..?”
அந்தப் பெண் சொன்னார் : “இந்த ஜவகர் நகரில் இருக்கும் பண்டிட் வீட்டுக்கு ..! ஏன் என்பதையும் நீங்கள் கேட்காமலே சொல்லி விடுகிறேன்.”
.
நடந்ததை அப்படியே போலீசுக்கு எடுத்துச் சொன்னார் அந்தப் பெண் .

அதிகாலையிலேயே ஒரு  போன் வந்தது ஸ்ரீநகரில் இருக்கும் இந்தப் பெண்ணுக்கு !

பேசியவர் ஜவகர் நகரில் இருக்கும் பண்டிட்டின் மனைவி . இருவரும் நெருங்கிய தோழிகள் . ஒரே ஸ்கூலில்தான் டீச்சராக வேலை செய்கிறார்கள் .
அது சரி ... போனில் பண்டிட்டின் மனைவி என்னதான் சொன்னார்  ?
.
இதோ ..அந்த பரிதாப கதை : “ஹலோ ..இங்கே  ஜவகர் நகரில் நிலைமை ரொம்பவும் மோசமாக இருக்கிறது . கடைகள் அடைக்கப்பட்டு பலநாட்களாகி விட்டன . வெளியில் செல்ல முடியவில்லை . வீட்டிலும் உணவுப் பொருட்கள் எதுவுமே இல்லை.. பாட்டியம்மா வேறு படுத்த படுக்கையாக இருக்கிறார்கள். தொலைபேசி வேறு வேலை செய்யவில்லை .. இப்போதுதான் இணைப்பு கிடைத்திருக்கிறது....

நான்கு  நாட்களாக  நாங்கள் யாரும் எதுவும் சாப்பிடவில்லை . உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறோம் ...இன்றும் பட்டினியாகத்தான் இருக்க வேண்டும் போல தெரிகிறது... நாளை நாங்கள் உயிரோடு இருப்பது கூட சந்தேகமாக ...”
.
பேசிக் கொண்டிருக்கும்போதே போன் கட் ஆகி விட்டது.
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தொலை தொடர்பு இணைப்புகள் மீண்டும் துண்டிக்கப்பட்டு விட்டன. இனி அவர்களோடு பேசுவது இயலாத காரியம் .
.
இங்கே ஸ்ரீநகரில் இந்தப் பெண்ணும் , அவரது கணவரும் தவித்தார்கள்; துடித்தார்கள் . “ நான்கு  நாட்களாக பட்டினியா ? எப்படி பண்டிட்டின் குடும்பத்துக்கு உதவுவது..?”
.
ஒரு நொடி கூட யோசித்து நேரத்தை கடத்தாமல் , உடனே ஜவகர் நகருக்கு புறப்பட்டு விட்டார்கள் கணவனும் மனைவியும்  .

வீட்டில் இருந்த கோதுமை , அரிசி , பருப்பு , காய்கறிகள் , மசாலா பொருட்கள் ... எல்லாவற்றையும் பெரிய மூட்டையாக கட்டி தன் கணவரின் தலையில் வைத்தார் அந்தப் பெண் . பஸ் , ஆட்டோ எதுவும் இல்லாததால் , பல கிலோ மீட்டர்கள் நடந்தே வந்து ....
.
“இப்போது ஜவகர் நகருக்கு வந்திருக்கிறோம்” இப்படி போலீஸ்காரர்களிடம் பொறுமையாக சொல்லி முடித்தார்  அந்தப் பெண்.

கலங்கி விட்டார் அந்த காவல்துறை அதிகாரி : “ ஒரு நட்புக்காக உயிரை பணயம் வைத்து பல கிலோமீட்டர்கள் நடந்தே வந்திருக்கிறீர்கள் .. அதுவும் இந்த மூட்டையை சுமந்து கொண்டு ! பாராட்டுகிறேன் அம்மா ... சரி ...உங்கள் குடும்ப நண்பர் பண்டிட் வீடு எங்கே இருக்கிறது ?”

“அடுத்த தெருவில்தான் .. !”

“வாருங்கள் .. நானே பத்திரமாக வீடு வரை வருகிறேன்...”
.
காவல்துறை அதிகாரியே சென்று பண்டிட் வீட்டு கதவை தட்டினார் .
கதவு மெல்ல திறந்தது ; உள்ளே இருந்து வந்த பண்டிட்டும் , அவரது மனைவியும் , இந்த தம்பதிகளை பார்த்தவுடன் ஆச்சரியத்தில்  “ அட கடவுளே ..இது என்ன ? எப்படி இவ்வளவு தூரம் வந்தீர்கள் ? முதலில் உள்ளே வாருங்கள் ..”
.
 தோழிகள் இருவரும் கட்டித் தழுவிக் கொண்டார்கள் ; கண்ணீர் வடித்தார்கள் .

வாசலில் நின்ற காவல்துறை அதிகாரி கூட தன் கண்களை துடைத்துக் கொண்டார் : “சரியம்மா ..முதலில் சாப்பாடு தயார் செய்து சாப்பிடுங்கள் . நான் வருகிறேன் .”

 “நன்றி சார்..”

“பை தி பை .. நான் உங்கள் பெயரை தெரிந்து கொள்ளலாமா மேடம் ..?”
.
அந்த ஸ்ரீநகர் பெண் சிரித்தபடி சொன்னார் : “சுபைதா பேகம்..”
.
ஆம் .. இந்து முஸ்லிம் கலவரம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருத்த அந்த நேரத்தில்  ... பசியால் துடித்துக் கொண்டிருந்த  பண்டிட் என்ற ஒரு இந்து மனிதரின் குடும்பத்துக்கு , தேடிச் சென்று உணவு கொடுத்தது சுபைதா பேகம் என்ற ஒரு முஸ்லிம் குடும்பம்தான் ..!
.
இது கதையல்ல .. “இந்தியா டுடே”யில் வந்த செய்தி !
.
இப்படிப்பட்ட மனித நேயம் , மத நல்லிணக்கம் கொண்ட மனிதர்கள் இருக்கும்வரை ...
அந்த ஆண்டவனே வந்தால் கூட இந்தியாவில் மத பிரிவினையை உருவாக்க முடியாது !
.
வாழ்த்துக்கள்
எங்கள் இனிய சகோதரி
சுபைதா பேகம் அவர்களே  .. !

No comments:

Post a Comment